ஏ. எம்.இப்ராஹிம் -திருகோணாமலை
வரலாற்று ரீதியாக, முக்கியத்துவம் பெற்றதும், பன்மொழி கலாச்சாரங்களையும், பன்மொழி விழுமியங்களையும் தன்னகத்தே கொண்ட, திருகோணமலை மாவட்டத்தில் வாழுகின்ற பல்லின சமூகங்களுக்கிடையில், வினைத்திறனான தொடர்படலை கட்டியெழுப்புவதற்காக ஊடகவியலாளர்களுக்கு சகோதர மொழிகளை கற்கும் பயிற்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்லின மக்கள் வாழும் இலங்கையில் தமிழ், சிங்கள மொழியறிவின் அவசியம் சுதந்திர இலங்கைக்கு பின்னரான காலகட்டங்களில் பிரயோக ரீதியாக பல சந்தர்ப்பங்களில் உணரப்பட்டது.
இந்த வகையில் தொடர்பாடல் மூலம், சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதுகாக்கும் பொருட்டு, திருகோணமலை மாவட்ட தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்கள மொழி ஊடகவியலாளர்களுக்கு தமிழ் மொழியையும் கற்பதற்காக ஆறு மாத கால பயிற்சி நெறியை திருகோணமலை எழுத்தாணி கலைப் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வாறு இரண்டாம் மொழி கற்பதன் ஊடாக நாம் இலங்கையர் என்ற உணர்வு வலுவடையும். தம்முடன் வாழும் சகோதர மக்கள் பயன்படுத்தும் மொழியைக் கற்று ஒருவரோடு ஒருவர் புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய திறனை ஊடகவியலாளர்கள் மூலம் விருத்தி செய்யும் போக்கு ஏற்பட்டிருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.
உயிரோட்டமான தேசிய ஒருமைப்பாட்டையும் தேசிய ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு அவசியமான ஆரம்ப அடித்தளத்தை இந்தப் பயிற்சிநெறி உருவாக்கித் தந்திருக்கின்றது.
இந்தப் பயிற்சியின் இறுதியில், சகோதர இனமொழி ஊடகவியலாளர்களுக்கிடையில் இன நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் மலை நாட்டுப் பகுதிக்கு களப்பயணம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருகோணமலையிலிருந்து தமிழ் மொழி ஊடகவியலாளர்கள் இந்த பயணத்தில் இணைந்து கொண்டனர்.
இந்தப் பயணத்தின் மூலம், சிறப்பான ஆளிடை மற்றும் கூட்டு தொடர்பாடல்கள் வினைத்திறனான முறையில் கட்டி எழுப்பப்பட்டு, இரு மொழி ஊடகவியலாளர்களுக்கும் இடையில் ஆழ்பரிவு, புரிந்துணர்வு என்பன மேம்படுத்தப்பட்டன.
இரண்டாம் மொழியை ஊடகவியலாளர் ஒருவர் கற்றுக் கொள்வதன் மூலம், நாட்டின் சமாதானத்துக்காகவும் சகவாழ்வுக்காகவும் தனது ஊடகப் பணியை பயன்படுத்த முடியும் என்பதை இந்தக் களப்பயணம் சிறப்பாக எடுத்துக்காட்டி இருக்கிறது.





Post a Comment