சமூகப் பொறுப்புக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கும் இளைஞர்களுக்குமிடையிலான தொடர்பாடலை அதிகரிக்கும் அறிவூட்டல் செயலமர்வு ஒன்று, நேற்று(13) கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இளைஞர்களின் ஈடுபாடு மற்றும் அவர்களின் சக்தி ஆகியவற்றின் ஊடாக, சமூகத்தில் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தல் என்ற செயற்றிட்டத்தின் கீழ், இந்த செயலமர்வு இடம் பெற்றது.
இதனை, FOSDOO என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
FOSDOO அமைப்பின் செயற்றிட்ட அதிகாரி விஜயசீலன் சஞ்சீவன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது,
இளைஞர்கள் மத்தியில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற. இந்த நிலையில், ஊடகவியலாளர்களுடனான இன்றைய சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென நினைக்கிறேன்.
இளைஞர்கள் எப்போதும், வேகமாக சிந்திப்பவர்கள். தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் வேகமாக கிடைக்க வேண்டுமென செயற்படுபவர்கள். இந்த நிலையில், ஊடகவியலாளர்களுடனான இன்றைய சந்திப்பின் மூலம் இளைஞர்களுடைய சுய எண்ணக்கரு, சுய மதிப்பீடு தொடர்பாக அவர்கள் நல்ல மன வலிமை ஒன்றைப் பெற்றிருப்பார்கள். இதன் ஊடாக சமூகத்தின் ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் இலகுவாக கொண்டுவர முடியும் என நினைக்கிறேன்.
சமூகத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தரக்கூடிய சூழ்நிலையை உருவாக்குபவர்கள் ஊடகவியலாளர்களாகும். சமூக மேம்பாட்டுக்கும் அபிவிருத்திக்கும் தேவையான மிகப் பெரிய ஆயுதம் ஊடகங்கள் ஆகும்.
இந்த செயற்றிட்டம் அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய ஆறு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.
செமலமர்வின் வளவாளராக அரசியல் துறை விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான நிக்சன் கலந்துகொண்டு தெளிவூட்டல்களை வழங்கினார்.




Post a Comment