ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின்(UNHRO) திருகோணமலை மாவட்ட குழு கூட்டம் கடந்த 2022/12/07 காலை 09.30 கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின்(UNHRO) திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் கலாநிதி ஹனிபா சஹீட் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதன் போது மாவட்டப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, பாதுகாப்பதற்காக நாங்கள் இன்று ஒரு அமைப்பாக ஒன்று கூடி இருக்கின்றோம்.
இந்த அமைப்பிற்கு, தன்னார்வ தொண்டு அடிப்படையில் நீங்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எம்மால் இயன்ற சேவைகளை நாம் இந்த மாவட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.
UNHRO ஸ்தாபர் கலாநிதி நாமல் ஜீவனந்த அவர்களின் தலைமையிலும் மற்றும் UNHRO பொதுச் செயலாளர் கலாநிதி
B.M. உவைஸ் அவர்களின் வழி காட்டலிலும் எதிர்காலத்தில் இந்த மாவட்டத்துக்கு பல்வேறு வேலை திட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். இதற்காக நீங்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதனை அடுத்து, UNHRO இன் கிண்ணியா பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் சபறுள்ளாகான் உரையாற்றுகையில்,
அமைப்பின் நோக்கம், அதன் எதிர் காலத் திட்டம் குறித்து, அனைத்து தொண்டர்களும் தெளிவாக விளங்கியிருக்க வேண்டும்.
அதிலேதான் அமைப்பின் எதிர்கால வெற்றி தங்கி இருக்கின்றது. இது ஒரு தொண்டு நிறுவனமாகும். இதற்கு தொண்டர்களின் கூட்டுப் பொறுப்பு மிக மிக அவசியமாகும்.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இந்த தினத்தை நாங்கள் அர்த்தமுள்ளதாக அனுஷ்டிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு வேலை திட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.
கூட்டத்தின் இறுதியில், தொண்டர்கள் அனைவரும் சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பால் தாய் நாட்டிலும் சக நாடுகளிலும் மனித நேயம், சமத்துவம், உரிமைகள் என்பவற்றை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக இணைந்துள்ள நாங்கள் எங்களது தனிப்பட்ட ஆசைகள் மற்றும் தேவைகள் என்பவற்றின் தலையீடுகள் அற்ற நடுநிலையான தொண்டர்களாக பணியாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



Post a Comment