பாலத்தின் நிர்மாண பணிகள் ஏன் இன்னும் தாமதம்?
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் இன்னும் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை?
படகு அனர்த்தத்துக்கான காரணங்கள் இதுதானா?
படகு அனர்த்தம் நடந்த அந்த நாளின் சோகக்கதை இதுதான்!!
2021 நவம்பர் 23 ஆம் நாள், காலை 7 மணிக்கு 15 மாணவர்களையும், 7 பெற்றோர்களையும் ஏற்றி, குறிஞ்சாக்கேணி ஆற்றங்கரையில் இருந்து கிண்ணியா ஆற்றங்கரைக்கு பயணித்த படகு கவிழ்ந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்து இருக்கின்றது.
இந்த நாளை நினைவு கூர்ந்து, மரணித்தவர்களின்
ஈடேற்றத்திற்காக துஆ பிராத்தனை செய்யும் நிகழ்வு ஒன்று கடந்த 23.11.2022 திகதி குறிஞ்சாேணி பாலமுன்றலில் நடைபெற்றது.
இதனை கிண்ணியா பிரதேச செயலகமும் கிண்ணியா ஜம்மியத்தில் உலமா சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
எட்டு உயிர்களை காவு கொண்ட இந்த நாளை எத்தனை வருடங்கள் சென்றாலும் கிண்ணியா மக்களால் மறக்கவே முடியாது. ஊரை மாத்திரமன்றி தேசத்தையே
ஆரா துயரில் ஆழ்த்திய இந்த நாளை யாராலேதான் மறக்க முடியும்?
இந்தப் படகு அனர்த்தம் பாடசாலைக்குச் சென்ற ஐந்து மாணவர்களையும், அவர்களை அழைத்துச் சென்ற இரு தாய்மார்களையும் ஒரு தகப்பனையும்
பலியெடுத்திருக்கின்றது.
ஆனால், விபத்துக்கு மிக மூல காரணமாக இருந்த கிண்ணியா கிழக்கு முனையையும் மேற்கு முனையையும் இணைக்கின்ற குறிஞ்சாக்கேணி பாலம் இன்னும் நிர்மாணிக்கப்படவில்லை. மக்கள் தற்காலிகமாக பயணம் செய்வதற்கு மாற்று வழி ஏற்பாடு செய்யப்படவில்லை. அத்தோடு, விபத்தில் பலியானவர்களுக்கு இதுவரை அரசாங்கத்தால் எந்தவிதமான நஷ்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை.
விபத்து நடந்த நேரம், ஒன்பது மாதங்களில் பாலத்தை நிர்மாணித்து தருவதாக, அரசாங்கம் அப்போது வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இப்போது விபத்து நடந்து 12 மாதங்களை எட்டி இருக்கின்றது. ஆனால் புனர்நிர்மாண வேலைகள் இன்னும் ஒரு அடி கூட நகரவில்லை.
பாலத்தின் நிர்மாண பணிகள் ஏன் இன்னும் தாமதம்?
இது தொடர்பாக, கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். ஹனி இந்த நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது,
இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்று பொது மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும் மாவட்டச் செயலாளருக்கும் சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றோம். ஆனாலும் படகு அனர்த்தம் நடந்து, தற்போது ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்கின்ற நிலையிலும் கூட, நிர்மாண பணி தொடர்பாக ஏதும் முன்னேற்றகரமான செயற்பாடுகளை நாங்கள் காணவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து கூறும் போது, இவ்வாறு தாமதத்திற்கு காரணம் எது என வீதி அபிவிருத்தி அதிகார சபைனரிடம் வினவிய போது, இந்த பால நிர்மாண பணி தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எமக்கு எந்தவிதமான தகவலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் இதுவரை கிடைக்க பறாமைக்கான காரணம் என்ன என்றும் நாங்கள் வினவியோ போது, அனர்த்தம் தொடர்பான வழக்கொன்று நீதிமன்றத்தில் இருப்பதால் இழப்பீடுகளை வழங்க முடியாது உள்ளதென வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நினைவு தின நிகழ்வில் கிண்ணியா ஜமாத்தில் உலமா சபையின் உபசலைவர் முஹம்மது ரியாஸ் மௌலவி கலந்து கொண்டு கருத்து கூறும்போது,
இதில் பலியான ஒவ்வொரு உயிருக்கும் பொறுப்புதாரிகள் இறைவனிடத்தில் பதில் சொல்லியாகவே வேண்டும். இதில் மரணித்தவர்கள் வைத்தியர்களின் பிள்ளைகளோ, அரசியல்வாதிகளின் பிள்ளைகளோ அல்ல. அவர்கள் ஏழைகளின் குழந்தைகள். இதன் காரணமாகவே இந்த பாலம் இன்னும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது.
நாட்டின் அரசியல் யாப்பை மாற்றுவதற்கு கை தூக்க முடியுமாக இருந்தால் ஏன் இந்த பாலத்தை நிர்மாணித்து தர முடியாது என கேள்வி எழுப்பினார்.
கிண்ணியா உலமா சபையின் முன்னாள் தலைவர் ஏ.எம் ஹிதாயத்துல்லா மௌலவி கருத்து தெரிவிக்கையில்,
படகு விபத்து நடந்து ஒரு வருடம் கடந்து விட்டபோதும், இந்தப் பாலத்தின் நிர்மாண பணிகள் கைவிடப்பட்ட நிலையிலே இருக்கின்றன. இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தப் பாலத்தின் ஊடாக நாளாந்தம் சுமார் 25,000 மக்கள் பிரயாணம் செய்கின்றனர். இன்னும் ஆபத்தான நிலையிலே இந்த பாலம் இருக்கின்றது. எனவே மேலும் பல உயிர் மேலும் பல ஆபத்துக்களை தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன் வர வேண்டும்.
அரசாங்கத்தின் நிதியை தொடர்ந்து நம்பி இருக்காமல், மத்திய கிழக்கு நாடுகளின் உதவிகளை பெற்றாவது, இந்தப் பாலத்தை நிர்மாணித்து தர வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது என்பதை ஞாபகம் மூட்டினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிண்ணியா மஜ்லிஸ் சூராவின் தலைவர் ஏ. ஆர். எம். பரீத்,
படகு விபத்து நடந்து ஒரு வருடம் கழிந்த நிலையிலும் பாலம் இன்னும் அதே நிலையில் இருப்பதானது நாம், எவ்வளவு தூரம் பின்னோக்கி இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
இந்தப் பாலத்தின் ஊடாக பயணம் செய்வது ஆபத்தானது என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அறிவித்தல் போடப்பட்டுள்ளது. ஆனால், அதே அறிவித்தல் போட்ட திணைக்களத்தினால் இந்த ஆற்றின் ஊடாக மக்கள் போக்குவரத்துக்கு மாற்று ஒழுங்கு எதனையுமே செய்யவில்லை என்று தெரிவித்தார்.
பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலையின் அதிபர் முஹம்மது தாரிக் இங்கு கருத்து தெரிவிக்கும் போது,
குறிஞ்சாக்கேணி பகுதியில் இருந்து, இனிய பிரதேச 5 பாடசாலைகளுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் நாளாந்தம் வருகை தருகின்றனர். படகு அனர்த்த நிகழ்ந்து ஒரு வருடமாகியும் இதற்கான மாற்று வழிகள் செய்து தரப்படவில்லை.
எனவே எதிர்காலத்திலும் இவ்வாறான மாணவர்களின் மரணத்தை தவிர்ப்பதற்கு இந்தப் பாலம் உடனடியாக புனர் நிர்மாணம் செய்து தரப்பட வேண்டும்.
அரசாங்கத்தால் முடியாவிட்டாலும் அரச சார்பற்ற நிதி நிறுவனங்களின் உதவிகளை பெற்றாவது, இந்தப் பாலத்தை நிர்மாணித்து மக்களுக்கு உதவ வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் ஏ நசுக்கர்கான்,
ஐந்து மாணவர்களை பலியடுத்த இந்த விபத்து மீண்டும் நடைபெறக்கூடாது. போதிய நிதி இல்லை என்று காரணத்தைச் சொல்லி இவற்றை சும்மா விட்டு விட முடியாது. இது மக்களின் அடிப்படை உரிமையாகும்.
இந்தப் பிரதேசம் கடலால் சூழப்பட்ட பகுதியாகும் அதேபோன்று நதிகளும் ஊடறுத்து செல்கின்ற பிரதேசமாகும். எனவே மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி பெற்றுக் கொடுப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.
குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு அருகாமையில் இருக்கின்ற அல் அஸ்கர் வித்யாலயம் நீச்சல் பயிற்சிக்கு தேவையான தடாகங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடமாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
மக்களின் போராட்டங்களும் குறிஞ்சாக்கேணி பாலமும்
இந்த பாலம் கிண்ணியா நகர சபையையும் கிண்ணியா பிரதேச சபையும் இணைக்கின்ற பாலமாகும். இது 1977 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பழமை வாய்ந்த இந்த பாலம் பல வருடங்களாக போக்குவரத்துக்கு தகுதியின்றி இடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது.
இதனால் இவற்றை புனரமைத்து தருமாறு காலாகாலமாக அந்தப் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்து வந்திருந்தனர். பாதுகாப்பான பயணத்துக்கு வருட கணக்கில் போராடினர்.
இதன் பலனாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது. திருகோணமலை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் மேற்பார்வையின் கீழ், 226.7 மில்லியன் ரூபா செலவில் மீள் கட்டுமானப் பணிகள் 2021.04.22 திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்த காலம் 245 நாட்களாகும்
படகு அனர்த்தத்துக்கான காரணங்கள் இதுதானா?
இந்த நேரத்தில் தற்காலிக போக்குவரத்துக்காக தனியார் ஒருவர் படகு ஒன்றை தயாரித்து சேவையில் ஈடுபடுத்தி வந்தார். இந்தப் படகே அனர்த்தத்துக்கு உள்ளானது.
இந்தப் படகை செலுத்துவதற்கு அனுமதி வழங்கியது யார் என்ற ஒரு கேள்வியும் அப்போது பொதுமக்களால் எழுப்பப்பட்டிருந்தது.
ஆற்றில் கவிழ்ந்த படகு சேவைக்கு 2021.10.28 ஆம் திகதி கிண்ணியா நகர சபை தவிசாளர்
பெரியாறுமுனையை சேர்ந்த ஒருவருக்கு அனுமதி வழங்கியிருந்தார் .
ஆனால் இதற்கு பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
1. குறித்த சேவையின் போது பாதுகாப்பு நியமங்கள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்
2. குழந்தைகள் பாடசாலை சிறுவர்களுக்கு இலவசமாக சேவையை வழங்க வேண்டும்
3. பழகினது உறுதிப்பாடு குறித்து அவ்வப்போது சோதித்தல் அவசியமானது
இந்த விதிமுறைகள்
பின்பற்றப்பட்டிருக்கின்றதா என பொதுமக்கள் கேட்கின்றனர். இவர்களின் கேள்வியில் நியாயம் இருக்கின்றது.
ஏனெனில், நான்கு பிளாஸ்டிக் வள்ளங்களை அனைத்து வைத்து, மேலே பலகை போடப்பட்டு இந்த படகு தயாரிக்கப்பட்டிருந்தது . இதை தயாரித்தவர் ஒரு சாதாரண நபர். பொறியியல் தொழில்நுட்ப அறிவோடு கட்டப்பட்ட படகு அல்ல. எனவேதான் படகின் தர உத்தரவாதம் தொடர்பான பிரச்சினை படகு அனர்த்தத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
அடுத்து, இந்த பால நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கும் போதே மாற்று வழி ஒன்றின் தேவை குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆரம்பத்திலிருந்தே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. பாராளுமன்றத்திலும் இது குறித்து கருத்துக்கள் பலமுறை தெரிவிக்கபட்டிருந்தன.
அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்திய அதிகாரிகள், அரசியல்வாதிகள், இவ்வாறான அபிப்பிராயங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவே இந்த படகு அனர்த்தம் ஏற்பட காரணம் என பலரும் தற்போது பேசிக்கொள்கின்றனர்.
எனவே எந்தவொரு திட்டத்தின் போதும் மக்களுடைய கருத்துக்களை உள்வாங்கி அதற்கேற்றவாறு திட்டங்களை வகுத்து அனைத்து மக்களுக்கும் பிரயோசனம் தரக்கூடிய வகையில் அதனை அமைப்பதே பொருத்தமானதாகும்.
மாறாக திட்டங்களைத் தயாரித்து அதனை மக்கள் மீது திணிக்கின்ற ஒரு நிலைமை மிகவும் அபாயகரமானது என்பதை இந்த அனர்த்தம் ஒரு படிப்பினையை ஊட்டியிருக்கின்றது.
இந்தப் பாலம் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அனர்த்தம் நிகழ்ந்த அன்று (23.11.2022) சுமார் 215 நாட்களை தாண்டி இருந்தன. அந்த நேரத்தில் ஐந்து வீதமான கட்டுமான பணிகளும் நடைபெற்று இருக்கவில்லை. இந்தத் தாமதமும் இந்த அனர்த்தம் இதற்கான காரணங்களில் ஒன்று என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, பாலம் குறித்த காலத்தில் நிர்மாணிக்கப்படாமை குறித்து விசாரணைகள்
துரிதபடுத்தப்பட்டிருப்பதாகவும் 6- 9 மாதங்களுக்குள் காலத்தைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் எஸ். வி. வீரக்கோன் அனர்த்தம் ஏற்பட்டு ஓரிரு நாட்களில் தெரிவித்திருந்தார்.
மேலும் பாலம் குறித்த காலத்தில் நிர்மாணிக்கப்படும் இதற்கு ஒப்பந்தகாரரின் பலவீனமே காரணம் என்றும் வேறொரு ஒப்பந்தக்காரரிடம் கையளித்து நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் கவன ஈர்ப்பு போராட்டம்.
ஆனால் படகு அனர்த்தம் நடந்து இப்போது ஒரு வருடங்களை கடந்து விட்ட போதிலும் பாலத்தை நிர்மாணிப்பதற்கோ, பயணத்திற்கான புதிய மாற்று வழியை உருவாக்குவதற்கோ எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இதன் காரணமாக, படகு அனர்த்தத்தின் போது தங்களுடைய சக மாணவர்களை இழந்த பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை மாணவர்கள், இன்றைய ஒரு வருட நிறைவு தினத்தில், பாலத்தை நிர்மாணித்து தரக் கோரி
கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இவர்களுடைய போராட்டம் நியாயமானது. இதனை அரசாங்கம் உடனடியாக கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக, பாடசாலை அதிபர் முஹம்மது தாரிக்கினால் கிண்ணியா பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அத்தோடு, இந்த விபத்துக்கு காரணமாக இருந்த, குறிஞ்சாக்கேணி பாலத்தை உடனடியாக நிர்மானித்து தரக் கோரி ஜனாதிபதிக்கு அவசர மகஜர் ஒன்றும் கிண்ணியா உலமா சபையினராலும் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
இவர்களை நினைவு கூறுவதற்காக, விபத்து நடந்த இடத்தில், பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் ஒன்று கூடி, இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டன.
படகு அனர்த்தம் நடந்த அந்த நாளின் சோகக்கதை இதுதான்!!
இந்த விபத்தில் எட்டு வயதான பாத்திமா சிரீன் மற்றும் ஆறு வயதான பாத்திமா அஹ்லா ஆகிய இரு சகோதரிகளும் கைகளை இறுகப் பிடித்தவாறு, அவர்களின் ஜனாஸா மீட்கப்பட்டது.
எனது இரண்டு பிள்ளைகளும் பாடசாலை செல்லும்போது கைகளை இறுகப் பிடித்தவாறு சந்தோசமாக சகோதரப் பாசத்தோடு செல்வார்கள். அன்றைய நாளும் அவ்வாறே இணை பிரியாது சென்றனர்.
அவர்கள் மரணித்து ஜனாஸாவாக மீட்கப்பட்டபோதும் இருவரும் கட்டியணைத்தபடியே இருந்தார்கள்.
நன்றாகப் படித்து நான் ஒரு நாள் வைத்தியராக வருவேன் வாப்பா என்று கூறிவிட்டு பாடசாலைக்குச் சென்ற மகளை, பத்து நிமிடங்களில் ஜனாஸாவாக பார்த்தோம் என்று கூறினார் இரண்டு பெண் பிள்ளைகளையும் படகு விபத்தில் இழந்த தந்தை அபூபக்கர் முபாஸ்.
இந்தப் படகு விபத்தில் மேலும்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் அவரது பிள்ளையும் உயிரிழந்த தோடு, இதே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு வயதான மற்றொரு ஆண் பிள்ளை ஒன்றும் படுகாயங்களுடன் உயிர்தப்பி கிண்ணியா தள வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
30 வயதான பாத்திமா சப்ரினா என்ற இந்த தாயும் இவரது மூன்றரை வயதான மகன் சேகு சஹி என்பவருமே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களாவர்.
பாத்திமா சப்ரினா ஒரு முன்பள்ளி ஆசிரியை. தனது பிள்ளைகள் இருவரையும் வழமைபோன்று அன்றைய தினமும் தான் கடமை புரிகின்ற முன்பள்ளிக்கு கொண்டு சென்றபோதே, இந்த படகு அனர்த்தம் ஏற்பட்டு இருக்கிறது.
படகு கவிழும் போது, இரு பிள்ளைகளையும் இவர் கட்டியணைத்தபடி இருந்ததை கரையில் சற்று தூரத்தில் பார்த்து, இவர்களை காப்பாற்ற ஓடி வந்த மக்கள் கொட்டிய கண்ணீர் காட்சியை எவ்வாறு சொல்வது?
பாதை கவிழ்ந்து சில நிமிடங்களில், தனது 5 வயதான மகளை கரைக்கு கொண்டு வந்து உயிரை காப்பாற்றிவிட்டு, மீண்டும் அந்தத் தாய் தனது மூன்றரை வயதான மகனை காப்பாற்றச் சென்று , உயிர் பிரிந்து சடலமாக மீட்கப்பட்ட காட்சியை யாரும் இலகுவாக மறந்து விட முடியாது.
இதைவிட கிண்ணியா பிரதேசம் கண்ணீரால் நனைந்த துயரம் என்னவென்றால் அந்தத் தாயும் பிள்ளையும் கட்டி அணைத்தவாறு இருந்த நிலையில் ஜனாஸா மீட்கப்பட்டமையாகும்.
மேலும் தனது மகனை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற 39 வயதான முகமது சக்கரியா தாலிசா என்ற தாயும், ஆறு வயதான இவரது மகன் பரிஸ் பஹி என்ற சிறுவனும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாய் கிளிநொச்சி
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் படகு கவிழ்ந்து இரண்டு வாரங்களுக்கு பின்னர் உயிரிழந்தார்.
அத்தோடு, தனது பேரப் பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற அப்துல் காதர் என்ற எழுபது வயதான முதியோரும் இந்த விபத்தில் பலியானார்.
இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் கிண்ணியா திருகோணமலை மற்றும்
கிளிநொச்சி ஆகிய வைத்தியசாலைகளில் பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்தப் பரிசோதனை அறிக்கையில், சேற்று நீர் மூச்சுக் குழாய்க்குள் உச்சென்றதால், மூச்சுத் திணறி உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எட்டு பேருடைய மரணத்துக்கும் இந்த ஒரே காரணமே குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே, இந்த மரணங்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் நிச்சயம் இறைவனிடத்தில் என்றோ ஒரு நாள் பதில் சொல்லியாகவே வேண்டும்.
இப்போதும் இந்தப் பாலத்தின் ஒரு பகுதியால் மக்கள் கால்நடையாகவும் சைக்கிள்கள் மூலமும் போக்குவரத்து செய்கின்றார்கள். ஆனால் இது பாதுகாப்பான பயணம் அல்ல.
குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் 8000 குடும்பங்களைச் சேர்ந்த 25,000 மக்கள் வாழ்கின்றனர். இங்கு ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன.
இவர்களுடைய கல்வி சுகாதாரம் மீன்பிடி வர்த்தகம் என்று அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நாளாந்தம் கிண்ணியா நகர் பகுதிக்கு வந்தே ஆக வேண்டும். இதன் காரணமாக இந்த ஆபத்தான பாலத்தின் ஊடான போக்குவரத்தை அவர்களால் தவிர்க்க முடியாதுள்ளது.
எனவே, இந்தப் பாலம் நிர்மாணிக்கப்படும் வரை நாளாந்தம் இந்த பாலத்தின் ஊடாக பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு மாற்று வழிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
அன்பின் வாசகர்களே!
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கு Share பண்ணுங்க. அத்தோடு இந்தக் கட்டுரை தொடர்பாக உங்களின் கருத்தையும் நான் எதிர்பார்க்கிறேன். அதற்காக Comments பண்ணுங்க.
இப்படிக்கு,
கட்டுரையாளர்,
ஒலுமுதீன் கியாஸ் ஷாபி












Post a Comment