(கியாஸ் ஷாபி)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள திருகோணமலை மாவட்ட எழுத்தாளர் ஒன்று கூடல் வைபவம் நாளை சனிக்கிழமை (17) காலை 9.00 மணிக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் முதன்மை அழைப்பாளராக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபில்யூ.திசாநாயக்கவும், சிறப்பு அழைப்பாளராக கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இலும் கலந்து கொள்வர்.
இவ்வைபவத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் ஏ.எப்.எம்.அஸ்ரப் 'கவிதை இலக்கியத்தின் பண்புகள், பரப்புகள், வடிவங்கள் திருகோணமலையில் ஆளுமை பதித்த இலக்கிய கர்த்தாக்கள்' என்ற தலைப்பிலும், ஓய்வுநிலை அதிபரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான சி.நவரத்தினம் இலக்கியமும், இளையோரும்' என்ற தலைப்பிலும் உரையாற்றுவர்.
அதேபோல திருமதி பானு சுதாகரன் படைப்பாளிகளின் எல்லை விரிவாக்கம்' என்ற தலைப்பிலும், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பாலசுகுமார் கூத்து மற்றும் நாடக வடிவங்களும், திருகோணமலையில் கூத்து மற்றும் நாடக பிரதியாகத்தின் செல்நெறியும்' என்ற தலைப்பிலும் உரையாற்றுவர்.
முழுநாள் நிகழ்வாக இடம்பெறும் இவ்வைபவத்தில் திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment