பாடசாலை செல்வதற்கு எரிபொருட்களை பெற்றுத் தர வேண்டும் என கோரி கிண்ணியா வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட அதிபர் ஆசிரியர்கள் இன்று (30)மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.
கிண்ணியா அதிபர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு, தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்துக்கு முன்னால் ஒன்று கூடிய ஆசிரியர்கள், அங்கிருந்து கிண்ணியா மட்டக்களப்பு பிரதான வீதிக்கு ஊர்வலமாகச் சென்று, அந்த வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீடித்த இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கிண்ணியா மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசே! பாடசாலை கல்வியை பாழாக்காதே, அதிபர் ஆசிரியர்களின் கண்ணியத்தைப் பாதுகார், பாடசாலை செல்வதற்கு எரிபொருள் வேண்டும், நாட் கணக்கில் நாங்கள் வரிசையில் நின்றால் எப்படி பாடசாலைக்கு செல்வது? போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்ட இடத்திற்கு கிண்ணியா பிரதேச செயலாளர், இந்தியா பிரதேச போலீஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் வருகை தந்து அதிபர், ஆசிரியர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன் போது, கிண்ணியா அதிபர்கள் சங்கத் தலைவர் எம். எம். எம். முஸம்மில் ஆசிரியர்களின் கௌரவம் மதிக்கப்பட வேண்டும்.
நாட்கணக்கில் வரிசையில் நின்று பாடசாலைக்குச் செல்ல முடியாது. கிண்ணியா வலயத்தில் கிராமப்புற பாடசாலைகளே அதிகம். சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கிராம பாடசாலைகளில் கடமையாட்டுகிறார்கள். இந்த நிலையில் எவ்வாறு பாடசாலைகளின் நடத்துவது? எனவே வாரத்தில் ஒரு நாள் கிண்ணியாவில் உள்ள 2000 ஆசிரியர்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்விசாரா ஊழியர்களுக்கும் எரிபொருளை தருவதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து பாடசாலைகளை முழுமையாக பணிப்பகிஷ்கரிப்பு செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதற்கு கிண்ணியா பிரதேச செயலாளரும் கிண்ணியா போலீஸ் பொறுப்பாதிகாரியும் உத்திரவாதம் அளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.





Post a Comment