https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 அரசியலில் 'முதன்மையானவர்' என்ற பல சாதனைகளைப் படைத்த நஜீப் அப்துல் மஜீத் காலமானார்.

அரசியலில் 'முதன்மையானவர்' என்ற பல சாதனைகளைப் படைத்த நஜீப் அப்துல் மஜீத் காலமானார்.


(கியாஸ் ஷாபி)

கிண்ணியா பிரதேச சபையின் முதலாவது தவிசாளர்!

முஸ்லிம் காங்கிரசில் வெற்றி பெற்ற முதல் திருமலை  எம்.பி!

கிண்ணியாவின் முதல் முழு அமைச்சர்  என்ற பெருமையை பெற்றவர்!

கிண்ணியாவின் முதலாவது முதலமைச்சர் என்ற சாதனையை படைத்தவர்!

இலங்கையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையையும் பெற்றவர்!

முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் 2023.12.22 ஆம் திகதி அதிகாலை இறையடி சேர்ந்தார். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)

சிறிது காலம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 66 ஆவது வயதில் காலமானார்.

இவர், தகவல் ஒளிபரப்பு முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹும் ஏ. எல். அப்துல் மஜீத்தின் புதல்வராவார்.

தனது தந்தையின் மரணத்தை தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூலம் அரசியலில் கால்பதித்தார்.

இவரது முதலாவது அரசியல் பிரவேசம், 1989 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலாகும். இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். எனினும் பாராளுமன்ற உறுப்பினராக முடியவில்லை.

இதனை அடுத்து, 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாகப் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இந்த வகையில் கிண்ணியா பிரதேச சபை வரலாற்றில் முதல் தவிசாளர் என்ற பெருமையை இவர் பெற்றார்.

1994 பொதுத்தேர்தலில் சந்திரிக்கா – அஸ்ரப் உடன்படிக்கைக்கு இணங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் நஜீப் ஏ மஜீத், போட்டியிட்டு, வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். இந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் வென்ற முதல் எம்.பி என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

2000 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுசன முன்னணி (PA) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று,  தபால் தொலைத் தொடர்பு பிரதியமைச்சராகவும் நியமனம் பெற்றார்.

2001 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் (UPFA) போட்டியிட்டு, வெற்றி பெறாத போதும், 2004 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
பிரதி  அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

2007 இல் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சரவை அந்தஸ்தற்ற கூட்டுறவு அமைச்சுப் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. இந்த வகையில் கிண்ணியாவின் முதல் முழு அமைச்சர் அந்தஸ்து என்ற பெருமையும் இவர் பெற்றார்.

2010 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில், இவர் போட்டியிட்டு உறுப்பினராக முடியவில்லை.

என்றாலும், 2012 இல் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மாகாணசபை உறுப்பினரானார். அத்தோடு, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் நியமனம் இவருக்கு வழங்கப்பட்டது. இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது முதலமைச்சர் என்ற பெருமையையும், இலங்கையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

2015 பொதுத் தேர்தலில் இவர் போட்டியிட்ட போதிலும், இவரால் வெற்றி பெற முடியவில்லை.

இதன்பின்னர் 2020 இல் நடந்த போதுத் தேர்தலில் இவர், தேசிய காங்கிரஸ் மூலம் தேர்தல் விண்ணப்பம் செய்திருந்த போதும் அந்தக் கட்சியின் வேட்புமணு நிராகரிக்கப்பட்டதால் இவரால் அந்த தேர்தலில், போட்டியிடவில்லை.

இவ்வாறு அரசியலில், முதன்மையானவர் என்ற பல சாதனைகளை நிலை நாட்டிய இவர், அரசியல் பொறுப்புகளை சுமந்தவர் என்ற வகையில் முடியுமான பல சேவைகளை இன, மத, பேதமற்ற முறையில், மாவட்டம் முழுவதும் செய்துள்ளார்.

ஆரவாரமின்றி, அமைதியான முறையில் மானுட பண்புகளோடு வாழ்ந்த, ஒரு அரசியல்வாதி ஆவார். தூய்மையும் ஆன்மீக செயற்பாடுகளும் இவரிடம் குடி கொண்டிருந்தன.

சிறிது காலம் உடல்நலக் குறைவுடன் காணப்பட்ட இவர், கொழும்பில் தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமையினால், 2023.12.22 ஆம் திகதி அதிகாலை இறையடி சேர்ந்தார். . இவரது ஜனாஸா இன்று(22) மாலை கிண்ணியா பொதுமையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்கும் சுவன வாழ்வுக்கும் பிரார்த்திப்போமாக! ஆமீன் .







Post a Comment

Previous Post Next Post