https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியாவில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் ஒன்று கூடல்

கிண்ணியாவில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் ஒன்று கூடல்

 


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கிண்ணியா கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு பெருநாள் ஒன்று கூடலும் விருந்துபசாரமும் நேற்று(22) கிண்ணியா உலமா சபை காரியாலயத்தில் நடைபெற்றன.



கிண்ணியா பிரதேச உலமா சபை தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி ஏ. ஆர். நசார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.



சகோதர இனத்தைச் சேர்ந்த அரச திணைக்களத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோர் இந்த நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.


இதன் போது கிண்ணியா உலமா சபைத் தலைவர் கருத்து தெரிவிக்கையில், பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாட்டிலே நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், ஒருவர் மற்றவர்களோடு புரிந்துணர்வோடு செயற்படுவது, ஒருவர் மற்றவர்களோடு இணைந்து பணியாற்றுவது, ஒருவர் மற்றவர்களின் உரிமைகளை மதித்து நடப்பது மற்றும் ஒருவர் மற்றவர்களுக்கு உதவி செய்வது போன்ற நான்கு வகையான கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.  

முகம்மது நபியவர்களின் ஆட்சி காலத்தில் இந்த நான்கு விடயங்களும் சிறப்பாக பேணப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக முஸ்லிம் அல்லாத ஒருவருடைய உடல் அடக்கஸ்தலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, அதற்காக எழுந்து மரியாதை செய்தார்கள். இந்த சம்பவம் மற்றவர்களின் உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.


பிற சமயச் சார்புள்ளவர்கள் குடும்பத்தவர்களாக இருந்தாலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அல்லது மாற்றாராயினும் அவர்களது சமய உணர்வை வெளிப்படுத்த அவர்கட்கு முழு உரிமை உண்டு.

ஒருவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் அவரது சமய நம்பிக்கைகளை, சட்டதிட்டங்களை, சடங்கு சம்பிரதாயங்களை எக்காரணம் கொண்டும் இழிவுபடுத்தவோ, குறைகூறவோ, குறைத்து மதிப்பிட்டுரைக்கவோ ஒரு முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை என இஸ்லாம் எடுத்தியம்புகிறது. இதற்குத் திருக்குர்ஆனில் மட்டுமல்ல, இறுதித் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையிலும் எத்தனையோ சான்றுகளைக் காணமுடிகிறது என்று தெரிவித்தார்.


இந்த நிகழ்வில், கிண்ணியா மற்றும் வான்எல பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சீனக்குடா விமானப்படை அதிகாரிகள், கிண்ணியா வைத்தியசாலை வைத்தியர்கள், மாவட்ட வனவளப்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட பௌத்த, இந்து, கிறிஸ்தவ மத தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




Post a Comment

Previous Post Next Post