தற்போது நடைபெற்று வரும் கடந்த ஆண்டுக்கான(2022) உயர்தர பரிட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 22 ஆம் தேதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் உரிய திகதியில் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படமாட்டாது எனதெரிய வருகிறது.
விடைத்தாள் கட்டுப்பாட்டு மதிப்பீட்டு பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பான கலந்துரையாடலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் புறக்கணித்தமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம், தமது உறுப்பினர்கள் இம்முறை விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என பரீட்சை திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராகவே அவர்கள் பல்கலைக்கழக கடமைக்கு புறம்பான சேவை வழங்கும் நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சை எதிர்வரும் 17ஆம் தேதி நிறைவடைகின்றது. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியை எதிர்வரும் 22 ஆம் தேதி முதல் ஆரம்பிக்க பரீட்சை திணைக்களம் முன்பு திட்டமிட்டிருந்தது
எனினும் விடைத்தாள்களை தயாரித்த பல்கலைக்கழக பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் கட்டுப்பாட்டு விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட மறுப்பு தெரிவித்தமையினால் விடைத்தால் மதிப்பீட்டுக்கான இறுதி புள்ளி வழங்கும் திட்டத்தை தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த திகதியில் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக பரீட்சை திணைக்கள வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.
உயரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக எதிர்காலத்தில் நடைபெற இருந்த தேசிய பரீட்சைகளும் பிற்போடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment