அகில இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் திருகோணமலை மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையே நடாத்தப்பட்ட 16 வயதின் கீழ், ஆண்கள் பிரிவுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், கிண்ணியா அல்-அமீன் வித்யாலயம் அணி 2022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட மட்ட சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இந்த போட்டி தொடர் கடந்த 27,28 ஆகிய இரு தினங்களும் கிண்ணியா எழிலரங்கு மைதானம் மற்றும் ரேஞ்சர்ஸ் மைதானம் ஆகியவற்றில் நடைபெற்றது.
இதில் திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து 21 பாடசாலை அணிகள் பங்குபற்றிருந்தன.
தனி விலகல் அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியின் அரை இறுதி ஆட்டத்துக்கு கிண்ணியா அல் அல் அக்ஸா, கிண்ணியா அல் அமீன் வித்யாலயம், மூதூர் மத்திய கல்லூரி, பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
முதல் அரை இறுதி ஆட்டத்தில் அல் அக்ஸா கல்லூரி அணியும் அல் அமீன் வித்யாலய அணியும் தலா ஒரு கோலை போட்டு, போட்டியை சமநிலைப்படுத்திக் கொண்டதனால் பெனால்டி உதை மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.
பெனால்டி உதையில் 5 : 5 என்ற அடிப்படையில், கிண்ணியா அல் அமீன் வித்தியாலயம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இரண்டாவது அரை இறுதியில் மூதூர் மத்திய கல்லூரி அணியும் பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை அணியும் தலா இரண்டு கோல்களை போட்டு போட்டியை சமநிலைப்படுத்திக் கொண்டதனால் இந்த இந்த ஆட்டத்தின் வெற்றியும் பெனால்டி உதை மூலம் தீர்மானிக்கப்பட்டது.
பெனால்டி உதையில் 5 : 3 என்ற அடிப்படையில், மூதூர் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில், மூதூர் மத்திய கல்லூரி அணியும், கிண்ணியா அல் அமீன் வித்தியாலய அணியும் மோதிக்கொண்டதில், இரு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் போட்டதனால் போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், முதல் பெனால்டி உதை மூலம் இரு அணிகளும் தலா 5 : 3 என்ற கோல் அடிப்படையில், போட்டியை சம நிலையில் முடித்துக் கொண்டது.
இரண்டாவது பெனால்டி உதைமூலமும் இரு அணிகளும் தலா 2 : 2 என்ற கோல் அடிப்படையில், போட்டியை சம நிலையில் முடித்துக் கொண்டது.
இதன் காரணமாக வெற்றியை தீர்மானிக்க மூன்றாவது உதை வழங்கப்பட்ட போது, அதில் கிண்ணியா அல் அமீன் வித்யாலயம் 1 : 0 என்ற கோல் அடிப்படையில் மூதூர் மத்திய கல்லூரி அணியை தோற்கடித்து, இந்த வருடத்துக்கான திருகோணமலை மாவட்ட சம்பியன் பட்டத்தை கிண்ணியா அல் அமீன் வித்தியாலய அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தை மூதூர் மத்திய கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.




Post a Comment