( கியாஸ் ஷாபி )
அகில இலங்கை உடற்கல்வி பயிற்சி போட்டியில் பெண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் கரம்பன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலய அணியும் ஆண்கள் பிரிவில் கொழும்பு பம்பலபிட்டி இந்து கல்லூரி அணியும் 2022 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இந்தப் போட்டிகள் யாவும் ஒக்டோபர் 22, 23 ஆகிய இரு தினங்களும் கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் வெகு கோலாகலமாக நடைபெற்றன.
ஆண்கள் பிரிவில் 16 அணிகளும் பெண்கள் பிரிவில் 15 அணிகளுமாக மொத்தம் 31 அணிகள் இந்தப் போட்டியில் பங்குபற்றி இருந்தன.
பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை கன்னகர ஜாதிக்க பாடசாலையும் மூன்றாம் இடத்தை விக்கில்ல ஹஸ்தர ஆதர்ஸ் வித்யாலயமும் தட்டிக் கொண்டன.
ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை புனமுல்ல C. W. கன்னங்கரா மகா வித்தியாலயமும் மூன்றாம் இடத்தை யாழ்ப்பாணம் சென் ஹென்றிஸ் கல்லூரியும் பெற்றுக்கொண்டன.
போட்டியின் சிறந்த அணித் தலைவராக கரம்பன் சிறிய புஷ்ப மகளிர் மஹா வித்தியாலய அணி தலைவி எஸ். திவுலா தெரிவு செய்யப்பட்டார்.
தனது அணி சாம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டமை தொடர்பாகவும், தான் சிறந்த அணித் தலைவியாக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நான் தரம் எட்டில் இருந்து உடற்கல்வி பயிற்சி போட்டியில் பங்குபற்றி வருகிறேன். 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் 2019 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டோம். இன்று இரண்டாவது முறையாகவும் தேசிய மட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறோம். கொரோனா காரணமாக 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளும் போட்டிகள் நடைபெறவில்லை.
மீண்டும் இந்த ஆண்டு இந்த அணியை பொறுப்பேற்று, அதற்கு சிறந்த தலைமைத்துவம் வழங்கி தேசிய மட்டத்தில் சிறந்த அணியாகவும், நான் சிறந்த அணி தலைவியாகவும் தெரிவு செய்யப்பட்டமை ஏழை மாணவர்களைக் கொண்ட எமது பாடசாலைக்கு மீண்டும் கிடைத்த பெருமையாகும்.
இதற்காக சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை முதல்வர் அருட் சகோதரி ரொசாரி செபஸ்தியன் அவர்களுக்கும் பயிற்சி ஆசிரியர் சுஜான் மற்றும் பயிற்றுவிப்பாளர்களான ரோஹான், சிந்துஜன் ஆகியோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை தட்டிக் கொண்ட கொழும்பு பம்பலபட்டி இந்து கல்லூரி அணியின் தலைவர் சிவபிரகாஷ் நிரேஸ் கருத்து தெரிவிக்கையில்,
இம்முறை இந்த போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு, இன்று எமது நீண்ட நாள் கனவை நனைவாக்கி இருக்கின்றோம். இதற்காக எமக்கு, ஊக்கத்தையும் ஆதரவையும் தந்த கல்லூரி அதிபரான மணிமாறப்பன் அவர்களையும் , பயிற்சி ஆசிரியர்களையும், ஏனைய ஆசிரியர்களையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகின்றேன் என்று தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் கிழக்கு மாகாண கல்வி செயலாளர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி கிண்ணத்தையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்து உரையாற்றுகையில்,
இந்தப் போட்டி இது இரண்டாவது தடவையாக கிண்ணியா மண்ணில் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்தப் போட்டியில் பங்கு பற்றிய சகல வீரர், வீராங்கனைகளுக்கும் கிண்ணியா மாணவர்கள் இலவசமாக உணவுகளை கொடுத்து உபசாரித்துள்ளார்கள். இதற்காக கிண்ணியா வலயக்கல்வி அலுவலக ஊழியர்கள், அதிபர்கள் சங்க உறுப்பினர்கள், உடற்கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், கிண்ணியா பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அனைவர்களுக்கும் நான் உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தேசியமட்ட சம்பியங்களை வாழ்த்துவதோடு, பங்கு பற்றி தனது திறமைகளை வழிகாட்டிய அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.












Post a Comment