(கியாஸ் ஷாபி)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(13) அதிகாலை விமானப்படைக்குச் சொந்தமான அண்டனோ ஜெட் விமானத்தின் மூலம் மாலத்தீவுக்கு சென்றுள்ளதாக பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாலைத்தீவிற்கு சென்ற விமானம் தொடர்பில் விமானப்படை விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் பின்வருமாறு,
இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதுள்ள அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முழு அங்கீகாரத்திற்கு உட்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள குடிவரவு, சுங்கம் திணைக்களங்களின் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டு, அதிமேதகு ஜனாதிபதி அவரின் பாரியார் மற்றும் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலைத்தீவிற்கு செல்வதற்கு விமானப்படையின் விமானம் ஒன்று 2022 ஜூலை 13 ஆம்திகதி அதிகாலை வழங்கப்பட்டது.
இதேவேளை இந்த பயணத்துக்கு இந்தியா உதவி உள்ளதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் முற்றாக நிராகரித்துள்ளார். இலங்கை மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்பவே இந்திய நாடு எப்போதும் செயல்படுமென்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கோட்டா நாட்டிலிருந்து வெளியேறியதை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தி உள்ளது.
கோட்டா வெளியேறினாலும் இன்னமும் பதவியில்தான் இருக்கிறார். பதில் ஜனாதிபதியாக எவரையும் அவர் நியமிக்கவில்லை..
ஜனாதிபதி பதவி விலகலை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்தால் மட்டுமே கோட்டாவின் இராஜினாமா இறுதியாகும். ஆனால் இன்னும் அவர் உறுதிப்படுத்தவில்லை.
ஜனாதிபதி ராஜினாமா செய்தால் அரசியலமைப்பின்படி, பிரதமரே பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும்.
இது எதுவரைக்கும் என்றால், பாராளுமன்றம் தனது ஒரு உறுப்பினரை தேர்தல் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யும் வரையாகும்.
எனவே, பதில் ஜனாதிபதி என்பது இது ஒரு தற்காலிக ஜனாதிபதி பதவியாகும்.
ஒரு முழுமையான ஜனாதிபதியை பாராளுமன்றம் தெரிவு செய்யும் வரை தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,(அவர் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யாத வரை) பதில் ஜனாதிபதியாக ஆக வேண்டும்.
ஜனாதிபதிப் பதவி வெற்றிடமானதில் இருந்து புதிய ஜனாதிபதி பதவியேற்கும்வரை, பிரதமர் பதில் ஜனாதிபதியாக கடமையாற்றுவார். எனவே
கோட்டோவின் வெற்றிடம் குறித்து இன்னும் சபாநாயகர் அறிவிக்கவில்லை.
புதிய ஜனாதிபதிக்கான தேர்தலை கோட்டபாய ராஜபக்ஷவின் மிகுதி காலத்துக்கான ஜனாதிபதி ஒருவரை பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்வதற்கு ஜனாதிபதிப் பதவி வெற்றிடம் ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கு பிந்தாத காலப்பகுதிக்குள் நடாத்தப்படுதல் வேண்டும்.
பதில் ஜனாதிபதியாக கடமையாற்றுபவரும் இத்தேர்தலில் போட்டியிடலாம். 1992 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி இருந்த பிரேமதாசாவின் கொலையை அடுத்து, பதி ஜனாதிபதியாக கடமையாற்றிய டி. பி விஜயதுங்க போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது
புதிதாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுபவர் தெரிவுசெய்யப்பட்டதில் இருந்து இரண்டு வாரங்களுக்குள் பதவியேற்கலாம். அதுவரை பிரதமரே பதில் ஜனாதிபதியாக இருப்பார்.
ஆனால் பதில் ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று அரசியல் யாப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

Post a Comment