கடமைக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு விசேட லீவு கல்வி அமைச்சின் செயலாளர் இணக்கம்.
கடமைக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு விசேட லீவு வழங்குவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்திருப்பதாவது,
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இரு வாரங்கள் பாடசாலைகளை மூடுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் நகர்புற பாடசாலைகளை மூடுவதாகவும் கிராமப்புற பாடசாலைகளை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பாடசாலைகள் அனைத்தும் வகை
1ஏபி, 1சி, 2 என்னும் வகைகளாகவும் கஷ்ட, அதி கஸ்ட பாடசாலைகளாகவுமே வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்றுவரை நகர்ப்புற பாடசாலைகள் மற்றும் கிராமப்புற பாடசாலைகள் எவை என்பதை
தீர்மானிப்பதற்குரிய குறிகாட்டிகள் எவையும் வெளியிடப்படாத சூழலில் சில மாகாணங்களில் சகல பாடசாலைகளையும் நடாத்தும் செயற்பாடு நடைபெறுகின்றது.
கிராமப்புற பாடசாலைகளை நடாத்தும் முடிவை கல்வி அமைச்சு எடுத்திருந்தாலும் கஷ்ட, அதிகஸ்ட பாடசாலைகள் கிராமப் புறங்களில் அமைந்துள்ளன.இவ்வகையான பாடசாலைகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் தூர இடங்களில் இருந்தும் ஆசிரியர்கள் சென்று பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு பணியாற்றுபவர்களுக்கு பாடசாலைகளுக்குச் செல்வதற்கான எரிபொருள் வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யாது பணிக்கு அழைக்க எடுத்துள்ள முடிவு கண்டனத்துக்குரியதாகும்.
பாடசாலைகளை சீராக நடாத்த முடியாமைக்கு அரசாங்கமே காரணமாகும்.
பொருட்கள் தட்டுப்பாடான நிலையில் மக்களுக்கான பங்கீட்டு தொடர்பாக அரசாங்கத்தின் செயல் திறனற்ற தன்மைகளே நெருக்கடிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
எனவே பாடசாலைக்கு செல்ல முடியாத ஆசிரியர்கள் கடமைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கடமைக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு விசேட லீவு அனுமதிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரினுடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Post a Comment