(வை. எல். எஸ். ஹமீட்)
புதிய பிரதமர் பதியேற்றதைத் தொடர்ந்து ஹர்ஷ டீ சில்வா, அலி சப்ரி போன்றவர்கள் நிதியமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முன்வராத நிலையில் பிரதமரே நிதியமைச்சராகவும் செயற்படுவார்; என்ற செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனாலும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகி இருக்கவில்லை.
அதேநேரம் பிரதமர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் பிரதமரே நிதியமைச்சர் என்ற எண்ணமே மக்களிடம் இருந்தது. இதற்கு இன்னுமொரு காரணம் பிரதமர் புதிய இடைக்கால வரவுசெலவத் திட்டத்தை சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகும்.
இந்நிலையில், இன்று அமைச்சரொருவர் நாட்டில் நிதியமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில் பதில் நிதியமைச்சராக ஜனாதிபதியே செயற்படுவதாக தெரிவித்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் பாதி சரி, பாதி பிழையாகும். அதாவது, அரசியலமைப்பின் சரத்து 44(2) இன் பிரகாரம் ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் தனக்கு ஒதுக்கிக்கொள்ளலாம். அதேநேரம் எந்த அமைச்சருக்கும் ஒதுக்காத அமைச்சும் ஜனாதிபதியின் கீழேயே இருக்கும்.
எனவே, அரசியல் ரீதியாக பிரதமரே நிதியமைச்சராக செயற்படுவார்; என்ற செய்திகள் வந்தபோதும் நிதியமைச்சு பிரதமருக்கு வழங்கப்படாததால் அது 44(2) பிரகாரம் ஜனாதிபதியீன்கீழ்தான் இருக்கும். ஆனால் அவர் பதில் நிதியமைச்சரல்ல. “பதில்” நிதியமைச்சர் என்ற பதம் பாவிக்கப்பட்டிருந்தால் அது பிழையாகும்.
உண்மையில் 1978ம் ஆண்டு யாப்பின்கீழ் ஜனாதிபதி ஒரு போதும் அமைச்சராக செயற்படுவதில்லை. அதாவது ஒரு ‘அமைச்சர்’ என்ற முறையில் அவர் ஓர் அமைச்சைத் தன்கீழ் வைத்திருப்பதில்லை. மாறாக, ஜனாதிபதி என்ற முறையிலேயே அவர் அவ்வமைச்சுக்களை வைத்திருக்கின்றார். இதை சரத்து 44(2) மற்றும் சில சரத்துக்களும் தெளிவுபடுத்துகின்றன.
இருந்தாலும் ஜே ஆருடைய காலத்திலிருந்தே அவ்வாறு ‘அமைச்சர்’ என்று குறிப்பிடுகின்ற ஒரு நடைமுறை வழக்கத்தில் இருந்து வருகின்றது. அதேநடைமுறையின்படி பார்த்தாலும் தற்போது ஜனாதிபதி ‘நிதி அமைச்சரே’ தவிர, ‘பதில் நிதியமைச்சர் அல்ல’
அதேநேரம் பிரதமர் நிதியமைச்சராக நியமிக்கப்படாதவரை அவர் நிதியமைச்சர் அல்ல.

Post a Comment