https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 போராட்டம் என்ற பெயரில் ஊடகங்களுக்குக் கட்டளையிடுவது தவறான முன்னுதாரணம் ஆகும்

போராட்டம் என்ற பெயரில் ஊடகங்களுக்குக் கட்டளையிடுவது தவறான முன்னுதாரணம் ஆகும்



போராட்டம் என்ற பெயரில் ஊடகங்களுக்குக் கட்டளையிடுவது தவறான முன்னுதாரணம் ஆகும்  சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ஊடக அறிக்கை ஒன்றை அந்த இயக்கம் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,


கடந்த 14ஆம் திகதி தம்மை போராளிகள் என அறிமுகம் செய்து கொண்ட குழுவினர் தேசிய தொலைக்காட்சி வளாகத்துக்குள் நுழைந்து நிகழ்ச்சி தயாரிப்பு தொடர்பில் உத்தரவு பிறபித்தமை, நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்த சுதந்திர ஊடக இயக்கம், குறித்த வலுக்கட்டாயமான நடவடிக்கை மற்றும் எல்லைகளை மீறிய தீவிர கருத்துக்களை நிராகரிக்கிறது.


ஊடகத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பது அந்ததந்த ஊடகத்தின் ஆசிரியர் குழுவின் உரிமையாகும், மேலும் அதில் செல்வாக்கு செலுத்துவது ஊடக சுதந்திரத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களின்படி ஊடக சுதந்திரத்தை தெளிவாக மீறும் செயற்பாடாகும்.


தேசிய தொலைக்காட்சி உள்ளிட்ட அரச ஊடகங்கள் தற்போதுள்ள அரசாங்கங்களின் ஊதுகுழலாகச் செயற்படுவதற்கு மாற்றீடாக 'பொது சேவை ஊடகமாக' மாற்ற வேண்டும் எனச் சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட ஊடக சமூகம் சுமார் இரண்டு தசாப்தங்களாகக் கூறி வருகின்றது. அரச ஊடகம் மற்றும் பொதுமக்களின் சொத்தான அதிர்வெண்ணை (frequencies) பயன்படுத்தும் ஊடகம் உட்பட அனைத்து ஊடக நியமங்களுக்கும் சுயாதீன ஊடக ஆணையகம் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை ஊக்குவித்து வருகின்றது. மேலும், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட ஊடக சுதந்திரம் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை நிபந்தனை என்பதை அங்கீகரிக்கும் சுதந்திர ஊடக இயக்கம், தமது கருப்பொருளில் கூறப்பட்டுள்ளபடி 'சுதந்திர பொறுப்பின் நீட்சி' என்பதை பயன்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறது. அந்த வகையில், நாட்டையே திவாலாக்கிய ஆட்சிக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ள இவ்வேளையில், தேசிய தொலைக்காட்சி உள்ளிட்ட அரச ஊடகங்கள் ஆட்சியைப் பாதுகாத்து மக்கள் எழுச்சிக்கு எதிராகச் செயற்படுவதை சுதந்திர ஊடக இயக்கம் எவ்வகையிலும் அங்கீகரிக்கவில்லை.


மேலும், தற்போதுள்ள அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும் அதற்கு எதிராகவும் செயற்படும் சில தனியார் தொலைக்காட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் சுதந்திர ஊடக இயக்கத்திற்கு கடுமையான விமர்சனங்கள் காணப்படுகின்றன.


இருந்தபோதிலும், ஊடக சமூகம், பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையில் பரந்த உரையாடல் மற்றும் உடன்படிக்கையினூடாக ஊடகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகின்ற சுதந்திர ஊடக இயக்கம், இது தொடர்பில் நீண்டகாலமாகக் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் எந்தவித தரப்பினரும் ஊடக நிறுவனத்திற்கு பலவந்தமாக உட்புகுந்து கட்டளைகள் இடுவதனால் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதே எமது நம்பிக்கையாகும். எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளானது ஊடக சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் அச்சுறுத்தலாகக் கருதும் சுதந்திர ஊடக இயக்கம் இச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றது.


இலங்கை தற்போது எதிர்நோக்கும் அவலமான தலைவிதியை எதிர்கொள்ளும் நிலையில், அதற்கு அண்மிய பொறுப்பாளரான ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ உட்பட தற்போதைய ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட ஊடக சமூகம் தமது ஆதரவை தெரிவித்தது. குறிப்பாக, அந்தப் போராட்டத்தினால் பிரதிபலிக்கப்பட்ட ஜனநாயக, அகிம்சைவழி, பன்மைத்துவ மற்றும் மேம்பட்ட கலாச்சார வெளிப்பாடுகள் எதிர்கால இலங்கைக்கான முன்னுதாரணமாகப் பெரிதும் பாராட்டப்பட்டது. துரதிஷ்டவசமாக, அண்மைய நாட்களில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் போராட்டத் தன்மையின் வளர்ச்சியில் எதிர் குணங்களை பிரதிபலிப்பதாக எமது அவதானிப்புகளில் காணக்கூடியதாக இருந்தது. அந்த எதிர்மறையான வளர்ச்சியின் பிரதிபலிப்பாகவே தொலைக்காட்சிக்குள் புகுந்த சம்பவத்தை நாம் பார்க்கிறோம். போராட்டக்காரர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட இருவர் குறித்த வளாகத்திற்குள் கட்டளையிட்டுக்கொண்டு நடந்து கொண்ட விதம் மற்றும் நேரடி ஒளிபரப்பின்போது தெரிவித்த சில கருத்துக்கள் நாகரீக சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்வதாகச் சுதந்திர ஊடக இயக்கம் கூறத் தயங்கவில்லை. "ஊடக நெறிமுறைகளை நாம் ஏற்கவில்லை" என்று கருத்து தெரிவித்தவரின் ஒருவர் எவ்வித ஒழிவு மறைவுகளும் இன்றி அவ்வாறே குறிப்பிட்டார். மேலும் அவர்கள் நேரடியாகவே "கோரிக்கைகளை அல்ல உத்தரவுகளையே வழங்குகிறோம்" என்றும் குறிப்பிட்டனர். இந்த நடத்தை பிரபல அமைச்சரான மர்வின் சில்வா ஒரு கும்பலுடன் தொலைக்காட்சி வளாகத்திற்குள் நுழைந்ததை நினைவூட்டுகிறது.


கருத்து தெரிவிக்கும் உரிமை, அனைத்து உரிமைகளுக்கும் அடிப்படை என்பதை வலியுறுத்தும் சுதந்திர ஊடக இயக்கம், போராட்டம் என்ற பெயரில் நடக்கும் இத்தகைய செயல்களைக் கண்டிப்பதுடன் அதனை விவாததிற்கு உள்ளாக்குவதன் ஊடாக அனுபவமற்ற போராட்டக்காரர்களுக்குரிய புரிதலைப் பெற்றுக்கொடுப்பது அறிவார்ந்த சமூகத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்துகிறது. எவ்வளவு சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டாலும் போராட்டத்தின் குறித்த குணாதிசயங்களைப் பாதுகாத்து செயல்படுமாறு 'அன்பின் போராட்டம்' என்ற மேம்பட்ட கலாச்சார எதிர்ப்பு தெரிவிக்கும் முறைக்குப் பங்களித்த அனைத்து தரப்பினரிடமும் நாம் சகோதரத்துவ வாஞ்சையுடன் வேண்டிக்கொள்கின்றோம்




Post a Comment

Previous Post Next Post