https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 "எம்.பி ஒருவருக்கு மூன்று கடவுச்சீட்டுகள்." முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹரூப்

"எம்.பி ஒருவருக்கு மூன்று கடவுச்சீட்டுகள்." முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹரூப்






இரட்டை பிரஜா உரிமை வைத்திருப்போர்கள் தண்டிக்கப்படுவதை விட, நாட்டுக்குள்ளே ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகளை வைத்திருந்து, அரசியலை துஷ்பிரயோகம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் கப்பல்துறை பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா
மஹரூப் கேட்டுக்கொண்டார்.

"தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைவோம்" எனும் தொனிப் பொருளில் வாக்காளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட, கலந்துரையாடல் ஒன்று, நேற்று (11) திருகோணாமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

மார்ச் 12 இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான பொதுமக்கள் உறுதிமொழியில், அரசியல் துஷ்பிரயோகம் என்ற விடயத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுகளை அரசியல்வாதி ஒருவர் வைத்திருப்பதும் அரசியல் துஸ்பிரயோகம்தான்.


திருகோணமலை மாவட்டத்தில், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மூன்று கடவுச்சீட்டுகளை வைத்திருந்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றார். இவர் இதனைப் பயன்படுத்தி, கடந்த 24 வருட காலமாக, 200 மேற்பட்டவர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, பல நூறு கோடி ரூபாய்களை உழைத்து,அவற்றை மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும், உள்நாட்டிலும் முதலீடு செய்திருக்கிறார்.

இப்படிப்பட்டவர்களுக்கு, வாக்களிக்கின்ற போது நீங்கள் அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குகின்றீர்கள். எனவே அவர் இந்த துஸ்பிரகத்தை செய்வதற்கு வாக்காளர்களே காரணமாவர்.

அரசியல் பிரவேசத்தில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மை. ஆனால் அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற சிலர், மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதை பாராளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி, அவர்கள் சத்தமிட்டு வாசிப்பவர்களாக இருக்கின்றார்கள். இன்று அப்படிப்பட்டவர்களுக்கு எழுதிக்கொடுக்க ஆள் கிடைக்காமையினால் இந்தக் கூட்டத்திற்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினரால் சமுகம் தர முடியாமல் இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.



மாவட்ட அபிவிருத்தி குழு மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு என ஒவ்வொரு மாதமும் இரண்டு கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் எந்த ஒரு கூட்டங்களிலும் இவர்கள் கலந்து கொள்வதில்லை. இவர்களால் சுயமாக கருத்துக்களை முன்வைக்க முடியாதா? மக்கள் கேள்விகளை கேட்கின்ற கூட்டங்களை சந்திக்க அவர்கள் அச்சப்படுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

வெளிநாடுகளில் உழைத்து, அங்கிருந்து அந்நிய செலவாணியை ஈட்டி தருகின்றவர்களுக்கு, அவர்களுக்கு வாக்களிக்கின்ற ஜனநாயக உரிமையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பெப்ரல் அமைப்பின் மார்ச் 12 இயக்கத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டு, மார்ச் 12 இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் லக்மல் பத்துகே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெப்ரல் அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுசித சுஜீவ கலந்துகொண்டு, நிகழ்வை நெறிப்படுத்தினார்.

இதன்போது, வாக்காளர்கள் அரசியல்வாதிகளிடம் கேள்விகளை கேட்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதோடு, அதற்கான பதில்களை வழங்குவதற்கும் அரசியல்வாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.



இந்த சந்தர்ப்பத்தில், மூன்று கடவுச்சீட்டு வைத்திருப்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா என வாக்காளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ஆம் பாராளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நிரூபிப்பேன் என என அப்துல்லா மஹரூப் பதிலளித்தார்.

இந்த நிகழ்வில், இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளிடம் பொதுமக்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கு, தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற, எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மகரூப், கபிலநுவான் அத்துக்கோரல்ல மற்றும் இரா. சம்மந்தன் ஆகிய நால்வரும் கலந்து கொள்ளாததையிட்டு மக்கள் தங்களுடைய அதிருப்தி தெரிவித்ததை காணக்கூடியதாக இருந்தது.


இந்த நிகழ்வில், முன்னாள் திருகோணாமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப், தேசிய மக்கள் சக்தியின் திருகோணாமலை மாவட்ட அமைப்பாளர் அருண் பிரேமச்சந்திர, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தங்கராச புஸ்பராஜா மற்றும் தேசிய காங்கிரஸின் பிரதிநிதியாக
முகம்மது நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post